Monday, February 23, 2015

சங்கர குரு!!


விழுப்புரம்
மடியில் 
விழுந்த 
சிவப் பழம்
நீ. 

அந்த சமயம், 
பேறு பெற்றது 
இந்து சமயம்
பின்னாளில்  
எண் புறம் சென்று 
ஞாலத்துக்கு 
ஊட்டினாய்  
ஞானப் பழம்.

நீ பிறந்த 
நட்சத்திரம் 
பெற்றது 
நற் பத்திரம்  

அனுஷத்தில்
பலர் பிறக்கலாம்  - வெறும் 
மனுஷனாய் 
நீ மட்டுமே ஆனாய் - பெரும் 
புருஷனாய் 

உன் பாதம் 
தன் மேல் பதிய - இம் 
மண் தவம் செய்தது 
பல நூற்றாண்டு  

பின் 
உன் பாதம்
தன் மேல் 
பதியும் பேறு பெற்றது 
ஒரு நூற்றாண்டு  

உலக நன்மைக்காய் மட்டுமே 
தவம் 
செய்த 
சிவம் நீ. 

உலகம் உய்ய - அந்த 
சிவம் 
செய்த 
தவம் நீ.

என் னொத்த  
அறிவிலா  
மடங்களுக்கு
நின் மடம்  - நல்
வழித் தடம்.

நீ ஆட்சி செய்த 
கலவை பீடம் 
இந்து தர்மத்தை  
வெளுத்த    
சலவை பீடம். 

இறை நம்பிக்கை - ஒரு 
இழி நம்பிக்கை  - என நம்பிய 
கருங்கட்சி நகரான   
திருக்கச்சி நகர் 
நீட்டியது  
உனை 
நம்பி  கை. 

வீண் போகவில்லை 
நீட்டிய கையின் 
நம்பிக்கை. 

நான் இருக்கேன் என 
அபயக்கை தந்த துன் 
திருக் கை. 

அன்று தொட்டு  
காமாக்ஷித் தாய் மடியில் 
அமைந்தது உன்
இருக் கை.

அண்டியவர்க்கு 
அருளை 
கிள்ளித் தராமல் 
அள்ளித் தந்தது 
உன் இரு கை. 
நாத்திகம் 
நகரா திருந்த 
கச்சி  நகர் 
ஆத்திக நகராய் 
திருந்தச் செய்தது 
உன் அருட் கை 

நின் 
சாத்வீக பலம்
கரைத்தது 
நாத்திகச்  செருக்கை 

உலகம் 
உவந்து 
உணர்ந்தது 
உன் அருட்
பெருக்கை   


அந்நாள் தொடங்கி 
இந்நாள் வரையில் 
திருக்கச்சி 
தலைநகராய்,  
காமாட்சி கட்சி 
காமகோடி ஆட்சி 

கச்சியில்அமர்ந்து 
அண்டம் 
ஆண்டது உன்
தண்டம்.

அண்டிய 
பேர்க்கேல்லாம் 
பிண்டம் கடைத்தேற 
வண்டி வண்டியாய் 
உன் அருள் 
அகண்டம். 

பாரதம் முழுதும் 
பாதம் கொண்டே 
ப்ரதக்ஷிணம் செய்த 
தட்ஷிணன் நீ. 

திருப் பாதம் தாங்கும் 
அரும் பேறு பெற்ற 
உம் கால் தூசி 
எங்களுக்கு  
இன்னொரு காசி

பெரியவாளாய் தோன்றி 
பெரியவாளாய் வாழ்ந்து  
அறியாதவாளின் 
அறியாமையை 
அறுத்தெறிந்த 
அரிய வாள்.

நீயே 
பெரியவா என்னும் 
பெரிய வார்த்தைக்கு 
உரியவா 

தர்மத்தை 
தழைக்கவிட 
வந்த 
வலியவா 

பெயர்  
புகழ் 
வலிய சென்று 
தேடாத 
அரியவா 

அதனாலேயே  
கோடானு 
கோடி பேரின் 
வழிபாட்டுக் 
குரியவா 

உலக இருளில் 
பொருளில்லா 
பொருள் தேடும் 
எம் பிறவிக் 
கடனை 
களைய வா 

எம் 
கர்ம வினைகளை 
அரிய வா 

அகந்தை 
அழிக்க வா 

மறைந்தும் 
மறையாமல் 
இறையாய் 
மறையாய் 
உறையும்  
மறையவா!  

எப்போதும் எம் 
மனதில்   
நீக்க மற 
நீர மர்க!  
நீர மரா 
இதயத்தில்  
நற் சிந்தை 
வந்த மரா !

இறுதிவரை    
என்  மனதில் 
நீ வாசம் 
செய்வதுவே 
நான் கோரும் 
ஒரே வரம். 

நீ வாசம் செய்திட்டால்  
உன் வாசம் எய்திட்டால் 
அத்தகு   
சுக வாசம் ஏதுமில்லை  
எத்தகு  
உபவாசம் தேவையில்லை. 

என்றும் நீ 
என் குரு 
என்றென்றும் 
என்னுடன் இரு. 
என் சிந்தை 
மறவா துன் உரு.
ஏனெனில் நீ 
கேட்காமலே கொடுக்கும் 
கற்பகத் தரு!