பாரதி
நீ
பா ரதம் தன்னில்
விடுதலை வேட்கை பூட்டி
தமிழ்த் தேர் ஓட்டிய
சாரதி.
நீ பிறந்த
எட்டைய புரம்
உன்னை
தன் மடியில் பெற்றது
பாருக்குள்
யாருக்கும்
கிட்டா வரம்.
சின்னச் சாமி
பெற்றெடுத்த
பெரிய சாமி
நீ.
அறியா வயதிலேயே
தமிழ் அறியாய்
என நினைத்த
காந்திமதி நாதனுக்கு
தமிழ் அரியாய்
சீறிய தமிழ்
உன்
சீரிய தமிழ்.
நெல்லை நகர் வாழ்
காந்திமதி நாதனே
நின் நாவில்
தமிழ் செய்து
காந்திமதி நாதனை
வெற்றி கொள்ளச்
செய்தானோ?
உன்
நாவில் உதித்த
முதல் வெண்பா
ஆனது ஓர்
வெற்றிப் பா.
அப் பா கேட்டு உன்
அப்பா மட்டுமின்றி
அரசு அறிந்தது
ஊர் அறிந்தது
பார் அறிந்தது
பாரதி
சின்னப் பயல் அல்ல
சின்னப் புயல்
என்று.
பணத்தை எடை போட்டு
வீசைக்கும்
பொருள்
ஆசைக்கும்
கவி பாடும்
புலவர் பலர்
ஈடாவரோ உன்
ஒரு பக்க
மீசைக்கு?
சோற்றுக்கும்
சுகத்துக்கும்
வாழ்வுக்கும்
வசதிக்கும்
பாட்டெழுதவில்லை நீ.
மண் விடுதலைக்கும்
பெண் விடுதலைக்கும்
கவி பாடுதலை
உயிர் வாழ்தலை விட
உவப்பாக
செய்தவன் நீ!
இல் அம்மாவாம்
செல்லம்மா
எண்ணமாய் மட்டுமின்றி
கண்ணனை
கண்ணம்மா என்னும்
பெண்ணம்மா வாக்கி
என்னமாய்
கவி செய்தாய்?
கண்ணனை
சேவகனாக்கி காட்டியது
உன் புலமை
வேறு
எக்கவிக்காவது
உண்டா
இவ் வலிமை??
நீ
பரா சக்தியின்
அருகில் அமர்ந்து
பேசிய
மகா சக்தி.
எனவே தான்
காலனை
காலால்
உதைக்க முடிந்தது
உன்னால்.
வங்கத்து நீரின்
மிகையால்
மையத்து நாடுகளில்
பயிர் செய்ய
அன்றே சிந்தித்தாய்.
நீர் இணைப்பு திட்டம்
நீ நினைத்த திட்டம்.
நீ
சேதுவை மேடுறுத்தி
வீதி சமைத்தாய்
சேதுவை
தமக் கேதுவாய்
அழிக்க நினைத்து
பீதி சமைக்கிறார்கள்
இன்றைய
கப்பலோட்டும் தமிழர்கள் !!
சுதந்திர
பாரதத்தின் மீது
நீ கொண்டாய்
நம்பிக்கை.
உனை களவாடி
சென்று விட்டதே ஒரு
தும்பிக்கை?
உன் பேனா வடித்த
இன் தமிழ் படிக்க
ஊறியது
என் நா.
நீ
புவியின்
செவிக்கு
தேனூற்றிய
கவி.
பூணூல்
தரித்த
பா நூல் நீ.
நீ
காக்கைக்கும்
குருவிக்கும் கூட
பாட்டெழுதிய
தமிழருவி.
உன் கவி
உள்ளவரை
போகாது
தமிழ் அருகி
பருகிட
ஆசைதான்
பாலால் உன்
கால் கழுவி
பால் கிடைக்கும்
எனக்கு இன்றே!
உன்
தாள் கிடைக்குமா
தமிழ்க் குன்றே??