Wednesday, June 3, 2015

ஞானதேசிகன் பிறந்த நாள்!!!


இசைத் தலை கொண்டு 
இசைத்தலை செய்து
இசைக்கலை உச்சம் தொட்ட 
இசைத் தலை நீ.

உன் இசை 
வெறும் இசையல்ல,
புவியின் மிசை 
பல கோடி காதுகளை ஈர்த்த 
செவி யீர்ப்பு விசை

நாடி நரம்பு தசை 
தாண்டி 
உள்ளத்தின் மிசை 
ஒட்டிய பசை

அன்னக்கிளி தொடங்கி 
70, 80 களில் 
நீ 
இசை போட்டு முடித்ததையே 
நாங்கள் இன்னும் 
அசை போட்டு முடிக்கவில்லை

உன் 
மொத்த இசையையும் 
ரசித்து முடிக்க 
போதாது வாழ் நாளே.

உன் இசையில் கிரங்காத 
ஓர் நாளும் 
பாழ் நாளே!

நீ பிறப்பிக்கும் 
இசையால் 
இருக்க முடியாது 
இலை மறை

எனவே தான் 

வரை முறை இன்றி 
ஒவ்வொரு முறையும் 
உன் இசை 
தாண்டிச் செல்கிறது - பல 
தலை முறை.

திரைக்கும் 
தரைக்கும் 

கோடம்பாக்கம் 
வரைக்கும் 
மட்டுமின்றி

வான் 
பிறைக்கும்
பிறை சூடும் 
இறைக்கும்

இறை சொல் 
மறைக்கும்

சென்று சேர்ந்த
உன் இசை 
இறை இசை.

அது என்றும் 
ஆனதில்லை இரை இசை

உடலுக்குத் தான் வயது 
எழுபத்து இரண்டு. 
உன் இசைக்கல்ல.

ஊனுக்கு வய துண்டு 
உனக்கு வய தில்லை

உடல் பெயர் தான் 
இளையராஜா 
உன் பெயர் இசை தான்.

இன்று போல் 
என்றென்றும் 
நல்லிசை பிறப்பித்து 
இசை உலகை சிறப்பித்து

இன்னும் நூறாண்டு 
இசைப் பாராண்டு

இசையே எல்லாமாய் 
எல்லாமே இசையாய்

ஞான தேசிகன் பல்லாண்டு 
கான தேசிகனாய் வாழ 
இறைவனை வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment

I welcome your comments...